டெல்லி விமான நிலையத்தைச் சுற்றி 60 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை.. லேசர் விளக்குகளுக்கும் கட்டுப்பாடு!

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், விமான நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் டிரோன்கள் உள்ளிட்ட பறக்கும் சாதனங்களுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்துக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களைத் தவிர்க்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் டெல்லி காவல்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த தடையின்படி, விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன்கள், ஆளில்லா விமான அமைப்புகள் (UAS), பாராகிளைடர்கள், ஏரோ மாடல்கள் உள்ளிட்ட பறக்கும் கருவிகளை இயக்க அனுமதி கிடையாது. விமானங்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய செயல்களைத் தடுக்கும் வகையில் இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், விமான நிலையத்தின் அருகே நடைபெறும் பொது நிகழ்ச்சிகள், விழாக்கள் உள்ளிட்ட கூட்டங்களில் லேசர் விளக்குகளை பயன்படுத்தவும் காவல்துறை தடை விதித்துள்ளது. லேசர் ஒளிக்கதிர்கள் விமானிகளின் பார்வையை பாதித்து விமான இயக்கத்தில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமான நிலையப் பாதுகாப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அடுத்த 60 நாட்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)