ஞாயிறு, நவம்பர் 01, 2026
உண்மையின் குரல்
சமையல்

தீபாவளிக்கு வாயில் வைத்ததும் கரையும் நெய் மைசூர் பாக் – வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

தீபாவளிக்கு வாயில் வைத்ததும் கரையும் நெய் மைசூர் பாக் – வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

 

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, புத்தாடை, இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்கள்தான் முதலில் நினைவுக்கு வரும். முன்பெல்லாம் பண்டிகைக்குத் தேவையான பலகாரங்களை வீட்டிலேயே தயாரிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்றைய அவசர வாழ்க்கையில் பலரும் கடைகளில் வாங்குவதை விரும்புகின்றனர்.

இந்த தீபாவளிக்கு கடைகளில் வாங்காமல், வீட்டிலேயே சுவையான நெய் மைசூர் பாக் செய்து குடும்பத்தினருடன் பகிர்ந்து மகிழலாம். வாயில் வைத்ததும் கரையும் மிருதுவான மைசூர் பாக் தயாரிக்கத் தேவையான பொருட்களும் செய்முறையும் இதோ!

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு – 1 கப்

  • சர்க்கரை – 1½ முதல் 2 கப் வரை

  • நெய் – 1 கப்

  • தண்ணீர் – ½ கப்

செய்முறை:

முதலில் கடலை மாவை சல்லடையில் சலித்து கட்டிகள் இல்லாமல் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் உருக்கி வைத்துள்ள நெய்யில் பாதியளவு சேர்த்து கட்டிகள் ஏற்படாதவாறு நன்றாகக் கலக்கவும்.

பின்னர் மைசூர் பாக் ஊற்றுவதற்கான ஒரு தட்டில் நெய் தடவி தயாராக வைத்துக்கொள்ளவும்.

அடுத்து, கனமான கடாயை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை மற்றும் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். மிதமான தீயில் சர்க்கரையை நன்றாகக் கரைத்து, கம்பிப் பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.

பாகு தயாரானதும் அடுப்பின் தீயைக் குறைத்து, நெய்யுடன் கலந்து வைத்துள்ள கடலை மாவை அதில் மெதுவாகச் சேர்க்கவும். கட்டிகள் உருவாகாமல் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

கலவை மைசூர் பாக் பதத்திற்கு வரத் தொடங்கியதும் மீதமுள்ள நெய்யை மூன்று பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு முறையும் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் ஒன்றாகத் திரண்டு வரும் நிலையில், நெய் தடவிய தட்டில் ஊற்றி சமமாகப் பரப்பவும். சுமார் 15 நிமிடங்கள் கழித்து விரும்பிய அளவில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளலாம்.

அவ்வளவுதான்! வீட்டிலேயே தயாரித்த சுவையான, மணமணக்கும் நெய் மைசூர் பாக் தயார். இந்தத் தீபாவளிக்கு உங்கள் கையால் செய்த இனிப்பைப் பகிர்ந்து பண்டிகையை மேலும் சிறப்பாக்குங்கள்!

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.