முருங்கைக்கீரையுடன் கொள்ளு சேர்த்து சுவையான குழம்பு செய்வது எப்படி? எளிய செய்முறை இதோ!

முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது உடலுக்குத் தேவையான சத்துக்களைப் பெற உதவும்.
பொதுவாக முருங்கைக்கீரையில் பொரியல், கூட்டு, குழம்பு எனப் பல வகை உணவுகளைச் செய்வோம். அந்த வகையில், புரதச்சத்து நிறைந்த கொள்ளையும் முருங்கைக்கீரையுடன் சேர்த்து சுவையான குழம்பு தயாரிக்கலாம். இதற்குத் தேவையான பொருட்களும் செய்முறையும் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
-
கொள்ளு – 1 கப்
-
முருங்கைக்கீரை – 2 கப்
-
புளி – எலுமிச்சை அளவு
-
சின்ன வெங்காயம் – 10
-
தக்காளி – 2
-
சாம்பார் தூள் – 1 டீஸ்பூன்
-
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
-
முழு மிளகு – 1 டீஸ்பூன்
-
பெருங்காயத் தூள் – ¼ டீஸ்பூன்
-
பூண்டு – 2 பல்
-
வெல்லம் – 1 டீஸ்பூன்
-
உப்பு – தேவையான அளவு
-
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
-
கடுகு – 1 டீஸ்பூன்
-
வெந்தயம் – ½ டீஸ்பூன்
-
கறிவேப்பிலை – 2 கொத்து
செய்முறை:
முதலில் கொள்ளை நன்றாகக் கழுவி சுமார் 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். முருங்கைக்கீரையைச் சுத்தம் செய்து கழுவி, பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். புளியையும் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவும். பூண்டைத் தட்டி வைக்கவும்.
அடுத்து, குக்கரில் முருங்கைக்கீரை, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும். வெந்ததும் கீரையைத் தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
அதே குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் ஊறவைத்த கொள்ளை தண்ணீர் வடித்து அதில் சேர்க்கவும்.
இதனுடன் நறுக்கிய தக்காளி, புளிக்கரைசல், சாம்பார் தூள், மஞ்சள் தூள், இடித்த மிளகு, பெருங்காயத் தூள், தட்டிய பூண்டு, வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி சுமார் 6 விசில் வரும் வரை வேகவைக்கவும். கொள்ளு நன்றாக வெந்ததும், ஏற்கெனவே வேகவைத்த முருங்கைக்கீரையைச் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
இறுதியாக, ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்துத் தாளித்து குழம்பில் ஊற்றவும்.
அவ்வளவுதான்! சுவையும் மணமும் நிறைந்த முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு தயார். சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.




கருத்துகள் (0)