தூக்கிலிடப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் காதலியைத் திருமணம் செய்த இளைஞர்! ஈரானில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதாக மரண தண்டனை விதிக்கப்பட்ட 25 வயது இளைஞர் அலிரேஜா, தூக்கிலிடப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு தனது காதலியைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரண தண்டனையை எதிர்கொண்டிருந்த அலிரேஜாவின் காதலி மஹ்சத் கேஷானி, அவரைத் திருமணம் செய்துகொள்ள அனுமதி வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் உருக்கமாகக் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதிகாரிகள் அனுமதி அளித்த நிலையில், சிறையில் இருந்த இருவரும் தொலைபேசி வாயிலாகத் திருமண உறுதிமொழிகளைப் பரிமாறிக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களது வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த இருவருக்கும், இந்தத் திருமணம் கடைசி சந்தர்ப்பமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே அலிரேஜா தூக்கிலிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலனைக் கரம் பிடித்த சில மணி நேரங்களிலேயே அவரைப் பிரிய நேர்ந்த மஹ்சத் கேஷானியின் நிலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட இளைஞரின் மரண தண்டனையும், அதை நிறைவேற்றுவதற்கு முன்பு நடைபெற்ற இந்தத் திருமணமும் மனித உரிமைகள் மற்றும் ஈரானின் மரண தண்டனை நடைமுறைகள் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளன.




கருத்துகள் (0)