வாந்தி எடுக்க முயன்றபோது வயிற்றுக்குள் சென்ற முட்கரண்டி.. அறுவை சிகிச்சை மூலம் மீட்பு!

நியூசிலாந்தில் வாந்தியை வரவழைக்க முயன்ற இளம்பெண்ணுக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. 27 வயதான அந்தப் பெண், வாந்தி எடுக்க முயற்சித்தபோது கையில் வைத்திருந்த முழு அளவிலான முட்கரண்டி தவறுதலாக தொண்டை வழியாக வயிற்றுக்குள் சென்றுள்ளது. இதனால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முட்கரண்டியை வெளியே எடுப்பதற்காக மருத்துவர்கள் முதலில் எண்டோஸ்கோபி முறையை பயன்படுத்த முயன்றனர். ஆனால் அந்த முயற்சியில் பொருளை அகற்ற முடியாததால், மாற்று சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கீஹோல் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றுக்குள் இருந்த முட்கரண்டியை மருத்துவர்கள் பத்திரமாக அகற்றினர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண்ணின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட அவர், இரண்டு நாட்களிலேயே நலமுடன் வீடு திரும்பினார். இந்த சம்பவத்தை முன்னிட்டு, வாந்தியை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் கூர்மையான பொருட்களை வாயில் அல்லது தொண்டையில் செலுத்துவது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.




கருத்துகள் (0)