2035க்குள் இந்திய வீடுகளில் 20 கோடி ஏசிகள் அதிகரிக்கும் என கணிப்பு!

இந்தியாவில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், வீடுகளில் குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு அடுத்தடுத்த ஆண்டுகளில் கணிசமாக உயரக்கூடும் என சர்வதேச எரிசக்தி முகமை (IEA) கணித்துள்ளது. இதன்படி, 2035ஆம் ஆண்டுக்குள் இந்திய வீடுகளில் புதிதாக சுமார் 20 கோடி ஏசி சாதனங்கள் நிறுவப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் ஏசி பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பங்களிப்பும் வேகமாக வளர்ச்சியடையும் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தற்போது உலகளாவிய ஏசி பயன்பாட்டில் இந்த பிராந்தியங்களின் பங்கு சுமார் 10 சதவீதமாக உள்ள நிலையில், 2035ஆம் ஆண்டுக்குள் அது 20 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதும், வீடுகளில் ஏசி பயன்பாடு விரிவடைவதும் மின்சார நுகர்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மின்சார தேவை ஆண்டுதோறும் சராசரியாக 6 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏசி பயன்பாட்டின் வளர்ச்சி நாட்டின் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத் தேவைகளிலும் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என இந்த கணிப்புகள் உணர்த்துகின்றன.




கருத்துகள் (0)