வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகி என சர்ச்சை சத்தியபாமா மறுப்பு!

சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகி என சர்ச்சை சத்தியபாமா மறுப்பு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 45 வயது ஆட்டோ ஓட்டுநர் ஹாரூன் ரஷீத் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி என்றும், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமாவின் ஆதரவாளர் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

 

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தாராபுரம் மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஹாரூன் ரஷீத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையே, அவர் தவெகவைச் சேர்ந்தவர் எனக் கூறி சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

 

சத்தியபாமாவுக்கு ஆதரவாக தாராபுரத்தில் வைக்கப்பட்டிருந்த கட்சி ஃபிளக்ஸ் பேனர்களில் ஹாரூன் ரஷீத் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படும் புகைப்படங்களும், தாராபுரம் தவெக ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தை சத்தியபாமா திறந்து வைத்ததாகக் கூறப்படும் வீடியோவும் எதிர்க்கட்சியினரால் பகிரப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

 

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த எம்எல்ஏ சத்தியபாமா, தமிழகத்தில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், தனக்கும் தவெக அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் சிலர் தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் குற்றம்சாட்டினார். கைது செய்யப்பட்ட நபர் யார் என்பது தனக்குத் தெரியாது என்றும், அவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் மறுத்துள்ளார்.

 

மேலும், தவெகவில் ஆட்டோ ஓட்டுநர் சங்கமே கிடையாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சத்தியபாமாவின் இந்த மறுப்பைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருவதால், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.