வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மாதிரி பத்திரப்பதிவு மையங்கள் கட்டண விவரங்கள் வெளியீடு!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மாதிரி பத்திரப்பதிவு மையங்கள் கட்டண விவரங்கள் வெளியீடு!

தமிழகத்தில் பத்திரப்பதிவு சேவைகளை எளிதாக்கவும், சார்பதிவாளர் அலுவலகங்களில் மக்கள் கூட்டத்தைக் குறைக்கவும் 6 பதிவு மாவட்டங்களில் புதிய இணை சார்பதிவாளர் அலுவலகங்களை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அலுவலகங்கள் நவீன வசதிகளுடன் கூடிய மாதிரி பதிவுச் சேவை மையங்களாக செயல்பட உள்ளன.

 

சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, கோவை வடக்கு, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படவுள்ளன. சம்பந்தப்பட்ட பதிவாளர் அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டு, பதிவுச் சட்டத்தின் 30-வது பிரிவின் கீழ் பதிவாளருக்கான அதிகாரங்களுடன் இங்கு பத்திரப்பதிவு சேவைகள் வழங்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் ஒரே இடத்தில் விரைவாகவும் வசதியாகவும் பதிவு பணிகளை மேற்கொள்ள முடியும்.

 

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட மாநிலம் முழுவதும் 25 மாதிரி பதிவுச் சேவை மையங்களை அமைக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, இந்த 6 மாவட்டங்களுக்கான அரசாணை நவம்பர் 26ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இம்மையங்களை நவீன முறையில் உருவாக்க தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் பெறப்பட உள்ளது.

 

இந்த மையங்களில் 50 முதல் 100 பேர் அமரக்கூடிய குளிர்சாதன வசதியுடன் கூடிய காத்திருப்பு அறை, ஆதார் அடையாளத்தை கண் மற்றும் கைரேகை மூலம் சரிபார்க்கும் கருவிகள், தானியங்கி இசைவு சரிபார்ப்பு வசதி, தொடுதிரை இயந்திரங்கள் உள்ளிட்டவை இடம்பெற உள்ளன. மேலும், தடையில்லா மின்சாரம் வழங்க ஜெனரேட்டர்கள், கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் 24 மணி நேர கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட உள்ளன.

 

இந்த மையங்களில் வழக்கமான பத்திரப்பதிவு கட்டணத்துடன் கூடுதல் சேவைகளைப் பெறுவதற்கு நான்கு வகையான வசதிக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

 

சாதாரண சேவைக்கு ரூ.2,000, அவசர சாதாரண சேவைக்கு ரூ.5,000, சிறப்பு சேவைக்கு ரூ.5,000 மற்றும் அவசர சிறப்பு சேவைக்கு ரூ.10,000 என கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

 

இந்தக் கட்டண வருவாயில் சாதாரண சேவைக்கான தொகையில் 80 சதவீதம் அரசுக்கும், 20 சதவீதம் தனியார் நிறுவனத்திற்கும் வழங்கப்படும். அதேபோல், அவசர சிறப்பு சேவைக்கான கட்டணத்தில் 65 சதவீதம் அரசுக்கும், 35 சதவீதம் தனியார் நிறுவனத்திற்கும் பகிர்ந்தளிக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மையங்கள் நடைமுறைக்கு வந்தால், பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களுக்கு காத்திருப்பு நேரம் குறைந்து சேவைகள் மேலும் வசதியாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.