வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மேல்செங்கத்தில் நின்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதல் நடத்துநர் உயிரிழப்பு 10க்கும் மேற்பட்டோர் காயம்!

மேல்செங்கத்தில் நின்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதல் நடத்துநர் உயிரிழப்பு 10க்கும் மேற்பட்டோர் காயம்!

திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் அருகே அதிகாலை நேரத்தில் சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பேருந்து நடத்துநர் உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பெங்களூரு – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கி காய்கறிகளை ஏற்றிச் சென்ற லாரி, மேல்செங்கம் அருகே வந்தபோது டயர் பஞ்சராகி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் நோக்கிச் சென்ற திருவண்ணாமலை பணிமனையைச் சேர்ந்த அரசுப் பேருந்து, அதிகாலை நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் சாலையோரம் நின்ற லாரியை கவனிக்காமல் அதன் பின்புறத்தில் வேகமாக மோதியது.

 

இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. பேருந்தை ஓட்டி வந்த செந்தில்குமார் (56) என்பவர் விபத்தில் சிக்கிய நிலையில், முன்பகுதியில் அமர்ந்திருந்த நடத்துநர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் (57) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் திருவண்ணாமணையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

மேல்செங்கம் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு வந்து உயிரிழந்த நடத்துநரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.