குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூரம்!

தேனி மாவட்டம் கூடலூரில் குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவர் தனது மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகளும் தாயை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கூடலூர் கோட்டை கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சிங்கத்துரை (47), அவரது மனைவி பிரியங்கா (35) ஆகியோருக்கு இடையே குடும்பப் பிரச்சினைகள் காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவரும் ஒரே வீட்டில் இருந்தபோதிலும், மாடி மற்றும் கீழ்த்தளத்தில் தனித்தனியாக வசித்து வந்தனர்.
சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு மேல் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்த பிரியங்காவிடம், ஏன் தாமதமாக வந்தாய் என சிங்கத்துரை கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு தீவிரமடைந்த நிலையில், ஆத்திரத்தில் சிங்கத்துரை கத்தியால் பிரியங்காவைக் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தாயை தந்தை கொலை செய்ததை நேரில் பார்த்த இரண்டு குழந்தைகளும் கதறி அழுதது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார், பிரியங்காவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்குப் பிறகு தலைமறைவான சிங்கத்துரையை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குடும்பப் பிரச்சினைகள் மற்றும் சந்தேகங்களால் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ள நிலையில், எந்தத் தவறும் செய்யாத இரண்டு குழந்தைகள் பெற்றோரின் மோதலால் தாயை இழந்து தவிக்கும் நிலை பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)