வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
இந்தியா

குருகுல விடுதியில் 13 வயது மாணவர் மர்ம மரணம் மருத்துவ உதவி அளிப்பதில் அலட்சியம் என குடும்பத்தினர் புகார்!

குருகுல விடுதியில் 13 வயது மாணவர் மர்ம மரணம் மருத்துவ உதவி அளிப்பதில் அலட்சியம் என குடும்பத்தினர் புகார்!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் சோர்ஹட்டா பகுதியில் செயல்பட்டு வரும் குருகுலப் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த 13 வயது மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 6ஆம் வகுப்பு படித்து வந்த சூர்யான்ஷ் குப்தா, கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்துள்ளார்.

 

இரவு வழக்கம்போல் தூங்கச் சென்ற மாணவர், மறுநாள் காலை படுக்கையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதைக் கவனித்த விடுதி ஊழியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மாணவரை சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

மாணவரின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படாததால், தூக்கத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் முதற்கட்டமாக சந்தேகிக்கின்றனர். எனினும், பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே உயிரிழப்புக்கான உண்மையான காரணம் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில், மாணவருக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி வழங்குவதில் பள்ளி நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மாணவரின் மரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணையின் முடிவுகள் வெளியாகும் நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து மேலும் தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.