மும்பை மாகிம் பகுதியில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் சுகாதார சீர்கேடு பொதுமக்கள் பாதுகாப்பு கோரி புகார்!

மும்பையின் மாகிம் மேற்கு பகுதியில் பொது இடங்களில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு, சட்டவிரோத விற்பனை, திட்டமிட்ட பிச்சை எடுக்கும் கும்பல்களின் நடமாட்டம் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மாகிம் கடற்கரை, மக்தூம் ஷா பாபா காத்ரி தர்கா சுற்றுவட்டாரம், பூங்காக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் போதைப்பொருள் பயன்படுத்துவோர் கூட்டமாகச் சேர்வதாகவும், இதனை எதிர்த்து கேள்வி எழுப்பும் உள்ளூர் மக்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதுடன் தாக்குதல்களும் நடத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக பல ஆண்டுகளாக மும்பை மாநகராட்சி, காவல்துறை, முதலமைச்சர், மும்பை காவல் ஆணையர் மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தும் உரிய நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என குடியிருப்போர் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், மாகிம் கபரிஸ்தான் அருகே வாகனங்களில் பிச்சைக்காரர்கள் குழுவாக அழைத்து வரப்பட்டு இறக்கிவிடப்படுவதுடன், பின்னர் மீண்டும் வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். நடைபாதை ஆக்கிரமிப்புகள் மற்றும் திறந்தவெளியில் கழிப்பிடமாகப் பயன்படுத்தப்படும் இடங்களால் அப்பகுதியின் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெனோசா பெண்கள் பள்ளி எதிரே உள்ள திகி டேங்க் பூங்கா, எல்.ஜே. கிராஸ் ரோடு மற்றும் மாகிம் ரயில் நிலையம் முதல் கடற்கரை வரையிலான பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் என குடியிருப்போர் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக சிவசேனா எம்எல்ஏ மகேஷ் சாவந்த் மற்றும் காவல்துறையினரை அணுகியபோது, போதிய நிதி இல்லாததால் கேமராக்கள் அமைக்க ஸ்பான்சர்களைத் தேடி வருவதாக பதிலளித்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
மாகிம் கடற்கரையில் நிரந்தர காவல் கண்காணிப்பு மையம் அமைக்க வேண்டும் என்றும், இரவு நேரங்களில் போலீஸ் ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு பதிலளித்த மாகிம் காவல்துறையினர், வழக்கமான ரோந்துப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் நடைபெற உள்ள மாகிம் மேளாவை முன்னிட்டு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.



கருத்துகள் (0)