புதன், அக்டோபர் 14, 2026
உண்மையின் குரல்
லைஃப்ஸ்டைல்

நல்ல டிரைவர் கிடைக்காததற்கு காரணம் என்ன? ஒரு லாரி ஓனரின் அனுபவப் பாடம்!

நல்ல டிரைவர் கிடைக்காததற்கு காரணம் என்ன? ஒரு லாரி ஓனரின் அனுபவப் பாடம்!

ஒரு லாரி ஓனர் உரையாடல் :-

"டிரைவர் சரியா அமையல..."

 

ஒரு மாதத்திற்கு முன்பு நான் ஒரு பதிவு போட்டிருந்தேன்.

 

"நல்ல டிரைவர் அமையல... எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் மனசார வேலை பார்க்க மாட்டாங்க" என்று.

 

அந்த பதிவுக்கு நிறைய பேர் கருத்து தெரிவித்திருந்தார்கள். சிலர் டிரைவர்களைத்தான் குறை சொன்னார்கள். சிலர் முதலாளிகள்தான் காரணம் என்றார்கள்.

 

ஒரு மாதம் அமைதியாக இருந்தேன். அந்த ஒரு மாதத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம்தான் இந்த பதிவு.

 

ஒரு நாள் லோடு ஏற்றி அனுப்பும்போது, டிரைவர் தயக்கத்தோடு, பேட்டா மட்டும் நீங்கள் வாங்கி கொடுங்க கஸ்டமர் கொடுக்க மாட்டேங்கிறாங்க கேட்க ஒரு மாதிரி இருக்கு என்று சொன்னார்.

 

அந்த நிமிடத்தில் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. நாம லட்சக்கணக்கில் லோடு அனுப்புகிறோம். ஆனால், அவருக்கு ஆகும் சில நூறு ரூபாய் செலவுக்குக் கூட கணக்கு பார்த்துக்கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது.

 

அன்று முதல் ஒரு முடிவு எடுத்தேன்.

 

சம்பளத்தை மட்டும் கொடுத்து, "வேலை பாருங்கள்" என்று சொல்லாமல், லோடுக்கு பேட்டா, வழியில் ஆகும் சின்னச் சின்ன செலவுகள், அவருக்கு தேவையான உதவிகள் என்று முடிந்தவரை செய்து கொடுத்தேன்.

 

அதற்குப் பிறகு நடந்த மாற்றம் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

 

நான் சொல்லாமலேயே காலையிலேயே வண்டியை சுத்தம் செய்து தயாராக வைத்திருப்பார்.

 

லோடு இருந்தால், "அண்ணா... எப்போ கிளம்பலாம்?" என்று அவரே போன் செய்வார்.

 

ஒரு லோடு முடிந்தவுடன், "அடுத்த லோடு எங்கே அண்ணா?" என்று ஆர்வமாகக் கேட்பார்.

 

வண்டியை சொந்த வண்டி போல பார்த்துக்கொள்வார். டயர், ஆயில், சர்வீஸ் என்று ஒவ்வொரு விஷயத்தையும் கவனிப்பார்.

 

அப்போது எனக்கு புரிந்தது...

 

சம்பளம் மட்டும் ஒரு மனிதரை வேலை செய்ய வைக்கும்.

 

ஆனால், மரியாதை, நம்பிக்கை, அக்கறை—இந்த மூன்றுதான் அவரை மனசார வேலை செய்ய வைக்கும்.

 

இன்று நான் உறுதியாகச் சொல்கிறேன்...

 

நல்ல டிரைவர் கிடைத்தால், ஒரு வண்டியை ஓட்டலாம்.

 

ஆனால், மனசார வேலை பார்க்கும் டிரைவர் கிடைத்தால், இன்னொரு வண்டி வாங்கும் தைரியம் வந்துவிடும்....

 

ஏனென்றால்...

 

வண்டியை ஓட்டுவது கைகள் மட்டுமல்ல... நம்பிக்கையும் கூட..

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.