உணவு ஒவ்வாமைக்கு தீர்வு காண புதிய mRNA தடுப்பூசி உருவாக்கம்!

உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில், டென்மார்க் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் mRNA தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளனர். உணவுகளில் உள்ள குறிப்பிட்ட ஒவ்வாமை காரணிகளை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, ஆரம்பகட்ட ஆய்வுகளில் நல்ல முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக பீச் பழம் மற்றும் சில வகையான நட்ஸ்களை உட்கொள்ளும்போது ஏற்படும் ஒவ்வாமையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. எலிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், தடுப்பூசி உடலில் ஒவ்வாமையை எதிர்கொள்ள உதவும் பாதுகாப்பு ஆன்டிபாடிகளை உருவாக்கியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் உணவு ஒவ்வாமைக்கு எதிரான தடுப்பு முறையை உருவாக்குவதில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
தற்போது விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஆய்விலேயே நம்பிக்கைக்குரிய முடிவுகள் கிடைத்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக மனிதர்களிடம் இந்த தடுப்பூசியை பரிசோதிப்பதற்கான ஆயத்தப் பணிகளில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மனிதர்களிடம் நடத்தப்படும் ஆய்வுகள் வெற்றிகரமாக முடிந்தால், எதிர்காலத்தில் குறிப்பிட்ட உணவுகளால் ஏற்படும் ஒவ்வாமையை தடுப்பதற்கான புதிய மருத்துவ அணுகுமுறையாக இது அமைய வாய்ப்புள்ளது.




கருத்துகள் (0)