திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
சமையல்

தீபாவளி ஸ்பெஷல்: காரசாரமான பச்சை மிளகாய் தயிர் முறுக்கு செய்வது எப்படி?

தீபாவளி ஸ்பெஷல்: காரசாரமான பச்சை மிளகாய் தயிர் முறுக்கு செய்வது எப்படி?

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், வீட்டிலேயே விதவிதமான பலகாரங்களைச் செய்து சுவைக்க பலரும் ஆர்வமாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு புத்தாடை, பட்டாசுகள் நினைவுக்கு வந்தாலும், பெரியவர்களுக்குப் பலகாரங்கள் செய்வதுதான் முக்கியமான வேலையாக இருக்கும்.

இன்றைய காலத்தில் பலரும் கடைகளில் பலகாரங்களை வாங்கினாலும், முன்பெல்லாம் வீட்டிலேயே பலகாரங்களைத் தயாரித்து குடும்பத்தினருடன் பகிர்ந்து சுவைப்பது வழக்கமாக இருந்தது. அந்த வகையில், அனைவரும் விரும்பிச் சாப்பிடும் முறுக்கைச் சற்று வித்தியாசமாக தயிர் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து செய்து பாருங்கள். இதோ அதன் செய்முறை!

தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு – 1½ கப்

  • உளுந்து மாவு – ¼ கப்

  • புளிக்காத தயிர் – ¼ கப்

  • பச்சை மிளகாய் விழுது – 2 ஸ்பூன்

  • எள் – 1 ஸ்பூன்

  • நெய் – 1 ஸ்பூன்

  • உப்பு – தேவையான அளவு

  • பொரிப்பதற்கு எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் 12 பச்சை மிளகாயுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து விழுதாக எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, எள், அரைத்த பச்சை மிளகாய் விழுது, தயிர் மற்றும் நெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து மென்மையாகப் பிசைய வேண்டும். மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் பதமாக இருந்தால் முறுக்கு அச்சில் பிழிவதற்கு எளிதாக இருக்கும்.

அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். முறுக்கு அச்சில் தயாரித்த மாவை நிரப்பி, சூடான எண்ணெயில் நேரடியாக முறுக்குகளாகப் பிழியவும்.

முறுக்கை இருபுறமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வேகும் வரை பொரித்தெடுக்கவும்.

அவ்வளவுதான்! சுவையான காரசாரமான பச்சை மிளகாய் தயிர் முறுக்கு தயார். இந்தத் தீபாவளிக்கு வீட்டிலேயே செய்து குடும்பத்தினருடன் பகிர்ந்து சுவைத்து மகிழுங்கள்!

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.