ஏற்காடு மலைப்பாதை பள்ளத்தில் அடையாளம் தெரியாத சிறுமியின் சடலம் மீட்பு போலீசார் தீவிர விசாரணை!

சேலம் மாவட்டம் ஏற்காடு – குப்பனூர் மலைப்பாதையில் கொட்டச்சேடு (வழுக்குப்பாறை) அருகே சாலையோர பள்ளத்தில் அடையாளம் தெரியாத சிறுமியின் சடலம் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 26ஆம் தேதி காலை அந்த வழியாகச் சென்றவர்கள் பள்ளத்தில் சிறுமியின் உடலைக் கண்டதும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சுமார் 12 முதல் 15 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடலை மீட்டனர். சிறுமி கவுன் மற்றும் ஸ்வெட்டர் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட உடல் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிறுமி வேறு எங்காவது கொலை செய்யப்பட்டு, பின்னர் மலைப்பாதையில் உள்ள பள்ளத்தில் வீசப்பட்டாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமியின் அடையாளத்தை கண்டறிய சேலம் மட்டுமின்றி நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் காணாமல் போன சிறுமிகள் தொடர்பான புகார்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
சிறுமியின் அடையாளம் தெரியாததால், அவரை அடையாளம் காண உதவும் வகையில் ஏற்காடு காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறுமி குறித்த தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக ஏற்காடு காவல் நிலையத்தை தொடர்புகொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.




கருத்துகள் (0)