சபரிமலை மாலை அணிந்த மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிறுத்தியதாக புகார் பெற்றோர் காவல் நிலையத்தில் மனு!

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டிருந்த 6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்ததாக புகார் எழுந்துள்ளது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கும் பள்ளியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு மாணவர்களும் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து பள்ளிக்கு வந்த நிலையில், பள்ளி நிர்வாகம் அவர்களை வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்காமல் வெளியில் நிற்க வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு நேரில் சென்று நிர்வாகத்தினரிடம் கேள்வி எழுப்பியதுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தங்களது குழந்தைகளை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்த பெற்றோர், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.




கருத்துகள் (0)