போரூர் அருகே 9ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு.. கடிதம் சிக்கியதால் போலீசார் விசாரணை!

சென்னை போரூர் அருகே அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 16 வயது மாணவர் ஜெய்கிருஷ்ணா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 9ஆம் வகுப்பு படித்து வந்த அவர், நேற்று அதிகாலை குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போரூர் போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் எழுதியதாகக் கூறப்படும் உருக்கமான கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் மற்றும் மாணவரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சம்பவத்தின் பின்னணி குறித்த முழுமையான விவரங்கள் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.




கருத்துகள் (0)