137 அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை – 70% வரை குறைய வாய்ப்பு!

புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் 137 அத்தியாவசிய மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த, மத்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் மருந்துகளின் உற்பத்திச் செலவுக்கும், சந்தையில் விற்பனை செய்யப்படும் விலைக்கும் இடையே அதிக வித்தியாசம் இருப்பதாகவும், இதனால் மருந்து நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மருந்துகளின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன்படி, சம்பந்தப்பட்ட மருந்துகளின் விற்பனையில் அதிகபட்ச லாப வரம்பு 30 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புற்றுநோய் சிகிச்சைக்காக அதிக செலவு செய்து வரும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நிதிச்சுமை குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் காரணமாக சில புற்றுநோய் மருந்துகளின் விலைகள் 70 சதவீதம் வரை குறையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அனைத்து 137 மருந்துகளின் விலையும் ஒரே அளவில் குறையும் என்று இதன் மூலம் பொருள் கொள்ள முடியாது.
புற்றுநோய் சிகிச்சைச் செலவுகள் பல குடும்பங்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் நிலையில், அத்தியாவசிய மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கை நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)