செவ்வாய், நவம்பர் 03, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

22 நாட்களாகியும் கிடைக்காத 7 வயது சிறுமி! கண்ணீருடன் மகளைத் தேடும் தாய் – செஞ்சி பகுதியில் சோகம்!

22 நாட்களாகியும் கிடைக்காத 7 வயது சிறுமி! கண்ணீருடன் மகளைத் தேடும் தாய் – செஞ்சி பகுதியில் சோகம்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி மாயமாகி 22 நாட்கள் கடந்துள்ளன. இத்தனை நாட்களாகியும் குழந்தை குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால், அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தனது மகளைப் பிரிந்து தவித்து வரும் தாயார் பவானி, குழந்தையை எப்படியாவது கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையிலும், இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை.

 

நாட்கள் கடந்து செல்லும் நிலையில், மகள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால் குடும்பத்தினர் கடுமையான மன உளைச்சலில் உள்ளனர். இதுகுறித்து வேதனை தெரிவித்த பவானி, கூலி வேலைக்குச் சென்றுதான் குடும்பத்தை நடத்தி வருவதாகவும், குழந்தை காணாமல் போனதிலிருந்து 20 நாட்களுக்கும் மேலாக வேலைக்குச் செல்ல முடியாமல் உணவுக்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து நடைபெறும் விசாரணைகளாலும் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் தங்களைக் குறித்து பரப்பப்படும் வதந்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும் பவானி குற்றம்சாட்டியுள்ளார். தானே குழந்தையை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டதாகவும், பணத்திற்காக விற்றுவிட்டதாகவும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் கூறிய அவர், இதன் காரணமாகப் பல ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பதையும் தவிர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அதேசமயம், தங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

 

சிறுமியைக் கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், விசாரணையில் புதிய தடயம் கிடைத்தால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பவானி குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், தனது மற்றொரு மகள் கல்லூரிக்குச் செல்லாமல் இருந்ததாகவும், அவர் தொடர்ந்து படிப்பதற்கு சிபிசிஐடி போலீஸார் அனுமதி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்தவித வதந்திகளுக்கும் இடமளிக்காமல், மாயமான சிறுமியைப் பாதுகாப்பாக மீட்டுத் தர வேண்டும் என்பதே அவரது குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.