சனி, அக்டோபர் 17, 2026
உண்மையின் குரல்
சினிமா

நடிகர் நெப்போலியன் சென்னையில் தனது வீட்டை விற்றதற்கு என்ன காரணம்? அவரே கூறிய தகவல்!

நடிகர் நெப்போலியன் சென்னையில் தனது வீட்டை விற்றதற்கு என்ன காரணம்? அவரே கூறிய தகவல்!

தமிழ் சினிமாவில் நடிகராகவும், அரசியல்வாதியாகவும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் நெப்போலியன். தற்போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வரும் அவர், மகனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டில் குடியேறியுள்ளார்.

சினிமாவைத் தாண்டி தற்போது திரைப்படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வரும் நெப்போலியன், அமெரிக்காவின் நாஷ்வில் பகுதியில் ‘அமெரிக்க ஆவி’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் அவரது குடும்பத்தினரும் பங்களித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாஷ்வில் பகுதியில் வசிக்கும் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளனர். நகைச்சுவை கலந்த பேய் படமாக இது உருவாகியுள்ளது.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் தான் வசித்து வந்த வீட்டை நெப்போலியன் ஏற்கெனவே விற்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். சென்னைக்கு வரும்போது தற்போது நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதாகவும் கூறியுள்ளார்.

வீட்டை விற்றதற்கான காரணம் என்ன?

அரசியலில் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த காலத்தில், பொதுமக்கள் பலர் உதவி கேட்டு தனது வீட்டிற்கு வந்து மனுக்களை அளித்து வந்ததாக நெப்போலியன் தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவில் வசிப்பதால் இந்தியாவுக்கு எப்போதாவது ஒருமுறை மட்டுமே வர முடிவதாகவும், தான் இல்லாத நிலையிலும் மக்கள் தனது வீட்டிற்கு வந்து மனுக்களை அளித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஆயிரக்கணக்கான மனுக்கள் வீட்டில் குவிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத சூழலில், தன்னை நம்பி வரும் மக்கள் ஏமாற்றமடையக் கூடாது என்பதற்காகவே வீட்டை விற்கும் முடிவை எடுத்ததாக நெப்போலியன் விளக்கியுள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்புகளையும், தன்னால் உதவ முடியாத நிலைமையையும் கருத்தில் கொண்டு அவர் எடுத்த இந்த முடிவு தற்போது கவனம் பெற்றுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.