நொய்டாவில் பெண்ணையும் செல்ல நாயையும் தாக்கிய ராட்சத நாய்! சிகிச்சையில் பக் நாய் உயிரிழப்பு!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நடைப்பயிற்சிக்குச் சென்ற பெண்ணையும் அவரது செல்ல நாயையும் கிரேட் டேன் வகையைச் சேர்ந்த பெரிய நாய் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செக்டர் 93B பகுதியில் உள்ள கிராண்ட் ஓமாக்ஸ் குடியிருப்பு வளாகத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது பெண் தனது பக் வகை நாயுடன் நடந்து சென்றபோது, திடீரென வந்த கிரேட் டேன் நாய் அவரைத் தள்ளிவிட்டு, சிறிய நாயைக் கடித்துக் குதறியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அருகிலிருந்தவர்கள் நாயை விலக்க முயன்றும், பலத்த காயமடைந்த பக் நாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தாக்குதலில் ஈடுபட்ட நாய் வாய்க்கவசம் அணியாமல் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையின் 112 உதவி எண்ணில் புகார் அளித்ததுடன், குடியிருப்பு நிர்வாகத்திடமும் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செல்லப்பிராணிகளைப் பாதுகாப்பாகக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் அவசியம் குறித்தும் குடியிருப்புவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.




கருத்துகள் (0)