ரயில் பயணியிடம் செல்போன் பறிக்க முயன்ற நபருக்கு நேர்ந்த அதிர்ச்சி – ஜன்னலில் தொங்கியபடி சென்ற வீடியோ வைரல்!

பீகார் மாநிலத்தில் ஓடும் ரயிலில் பயணியிடம் செல்போனைப் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் நபர், ரயில் ஜன்னலில் தொங்கியபடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவரிடம், வெளியே நின்ற மர்ம நபர் செல்போனைப் பறிக்க முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது சுதாரித்துக்கொண்ட பயணி, அந்த நபரின் கையை ஜன்னல் வழியாக இறுக்கமாகப் பிடித்துள்ளார்.
இதற்கிடையில், ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லத் தொடங்கிய நிலையிலும் பயணி அவரது கையை விடவில்லை. இதனால், அந்த நபர் ரயிலின் வெளிப்புறத்தில் தொங்கியபடியே சிறிது தூரம் சென்றதாகக் கூறப்படுகிறது.
சிறிது நேரத்திற்குப் பிறகு பயணி அவரது கையை விடுவித்த நிலையில், அந்த நபர் கீழே விழுந்துள்ளார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தச் சம்பவத்தில் கீழே விழுந்த நபருக்கு காயம் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஓடும் ரயிலின் வெளிப்புறத்தில் தொங்கிச் செல்வதும், அத்தகைய சூழலில் ஒருவரின் கையைப் பிடித்திருப்பதும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்கள் என்பதால், இந்த வீடியோ ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலையையும் எழுப்பியுள்ளது.




கருத்துகள் (0)