டாஸ்மாக் கடைகளில் புதிய மெஷின் அறிமுகம்.. காலி மதுபாட்டில்களுக்கு இனி பணம் நேரடியாக வங்கிக் கணக்கில்! தமிழக அரசு அதிரடி அரசாணை..

சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக நவீன ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்களை மதுபானக் கடைகளில் நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின்படி, வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள காலி மதுபாட்டில்களை இயந்திரத்தில் செலுத்தலாம். அதற்கான தொகை, வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும். இந்தத் தொகை ரொக்கமாக வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் பணியில் டாஸ்மாக் ஊழியர்களை ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு மாவட்டங்களில் ஊழியர்கள் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள தானியங்கி இயந்திரங்கள் மூலம் மனிதத் தலையீடு குறைக்கப்பட்டு, முறைகேடுகளைத் தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காலி மதுபாட்டில்கள் கண்ட இடங்களில் வீசப்படுவது தடுக்கப்பட்டு, கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக மறுசுழற்சி செய்யவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இந்தத் திட்டம் உதவும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)