செவ்வாய், நவம்பர் 03, 2026
உண்மையின் குரல்
விளையாட்டு

ஐபிஎல் 2027 ஏலத்தில் முகமது அமீர்? பிரிட்டிஷ் குடியுரிமையால் புதிய வாய்ப்பு!

ஐபிஎல் 2027 ஏலத்தில் முகமது அமீர்? பிரிட்டிஷ் குடியுரிமையால் புதிய வாய்ப்பு!

 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காகத் தனது பெயரைப் பதிவு செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2008ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடருக்குப் பிறகு, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அரசியல் சூழல் காரணமாகப் பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது. இந்நிலையில், முகமது அமீர் தற்போது பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றிருப்பதால், இங்கிலாந்து நாட்டின் வெளிநாட்டு வீரராக ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே இங்கிலாந்தின் 'தி ஹன்ட்ரட்', 'டி20 பிளாஸ்ட்' உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் வீரராக விளையாடி வரும் அமீர், ஆப்பிரிக்கன் பிரீமியர் லீக் வரைவிலும் பிரிட்டிஷ் வீரராகப் பதிவு செய்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலும் உள்ளூர் வீரராக இல்லாமல் வெளிநாட்டு வீரராகப் பங்கேற்க உள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த காலத்தில் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் பெற்ற அசார் மஹ்மூத், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். அதேபோன்று முகமது அமீரும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

துல்லியமான இடதுகை வேகப்பந்து வீச்சு மற்றும் புதிய பந்தில் ஸ்விங் செய்யும் திறன் கொண்ட 34 வயதான அமீர், ஏலத்தில் இடம்பெற்றால் முன்னணி அணிகளின் கவனத்தை ஈர்க்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் ஏலத்தில் பங்கேற்பதற்குப் பிசிசிஐயின் இறுதி ஒப்புதலும், ஏல விதிமுறைகளுக்கு உட்பட்ட தகுதியும் அவசியமாகும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.