அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது தொடர் துப்பாக்கிச் சூடு! 24-க்கும் மேற்பட்டோர் பலி; 90 பேர் காயம்!

அமெரிக்காவில் ஹாலோவீன் பண்டிகை வார இறுதியில் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நாட்டின் பல மாநிலங்களில் நிகழ்ந்த இந்த வன்முறைச் சம்பவங்களில் 24-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 90-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கலிபோர்னியா முதல் டெலாவேர் வரையிலான பல பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இரவு நேர பொழுதுபோக்கு மையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் திருவிழா நடைபெறும் இடங்களில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. கலிபோர்னியாவின் ஃபேர்ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல ஹாலோவீன் அங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், பலரும் காயமடைந்துள்ளனர்.
இதுதவிர, பல்கலைக்கழக வளாகங்களுக்கு அருகிலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. டெலாவேர் பல்கலைக்கழகம், அர்கான்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் இல்லினாய்ஸ் வெஸ்லியன் பல்கலைக்கழகத்தின் எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் மாணவர்கள் உள்ளிட்ட பலர் துப்பாக்கிக் குண்டுகளால் காயமடைந்துள்ளனர். ஆலாபாமாவில் விளையாட்டுப் போட்டி முடிந்த பிறகு ஏற்பட்ட மோதலும் துப்பாக்கிச் சூட்டில் முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்தி வருவதுடன், தொடர்புடைய சந்தேக நபர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)