புனே அருகே 18-வது மாடியில் இருந்து விழுந்து தாயும் 6 வயது மகனும் உயிரிழப்பு – போலீசார் தீவிர விசாரணை!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில், அடுக்குமாடிக் குடியிருப்பின் 18-வது மாடியில் இருந்து விழுந்து 33 வயது பெண்ணும் அவரது 6 வயது மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிக்னேச்சர் பார்க் குடியிருப்பில் வெள்ளிக்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த ஏக்தா பாங்கட் (33) மற்றும் அவரது மகன் மாதவ் பாங்கட் (6) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஏக்தா தனது கணவர் மனோஜ் பாங்கட் மற்றும் மகனுடன் கடந்த சில ஆண்டுகளாக அந்தக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக 7-வது மாடியில் உள்ள வீட்டில் அவர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. மனோஜ், யெரவடா பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று காலையில் வழக்கம்போல் மனோஜ் வேலைக்குச் சென்றுள்ளார். வீட்டில் ஏக்தாவும் அவரது மகனும் மட்டுமே இருந்துள்ளனர். மாலை 6.30 மணியளவில் குடியிருப்பின் டக்ட் பகுதியில் பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்ற குடியிருப்புவாசிகள், தாயும் மகனும் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக போலீசாருக்கும் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வாகட் காவல் நிலைய போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
இதன் ஒரு பகுதியாக, குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், ஏக்தா தனது மகனுடன் லிஃப்ட் மூலம் 18-வது மாடிக்குச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாடியின் கேலரியில் உள்ள தடுப்புக் கம்பி அருகே தாய் மற்றும் மகனின் செருப்புகள் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தச் சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்பதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. குடும்பச் சூழல் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முழுமையடைந்த பின்னரே உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




கருத்துகள் (0)